×

60 ஆயிரம் சதுர அடியை, 6 ஆயிரம் சதுர அடியாக மாற்றி வாடகை வசூலிப்பு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்திய செயல் அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை: கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்திய செயல் அலுவலரை சஸ்பெண்ட் செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கு  சொந்தமாக நாகர்கோவில் பகுதியில் 60 ஆயிரம் சதுர அடியில் கட்டிடம் ஒன்று தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டு வரை மாதம் ரூ.4.50 லட்சம் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஆனால், 2019ல் வாடகை மறு நிர்ணயம் செய்ய அறநிலையத்துறை அறிவித்திருந்தது. அப்போது கோயில் செயல் அலுவலராக இருந்த அஜீத் என்பவர் 60 ஆயிரம் சதுர அடி கட்டிடத்தை 6 ஆயிரம் சதுர அடி என மாற்றியுள்ளார்.

மேலும், அந்த இடத்துக்கு மாதம் ரூ.50 ஆயிரம் மட்டுமே வாடகை வசூலித்து வந்து இருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டது. கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை மட்டும் பல மடங்கு குறைத்து வாடகை வசூலிக்கப்பட்டதால், அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருப்து தெரியவந்தது. இது தொடர்பாக கன்னியாகுமரி மண்டல இணை ஆணையர் அறிக்கை ஒன்றை ஆணையர் குமரகுருபரனுக்கு அனுப்பினார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்திய செயல் அலுவலர் அஜீத்தை சஸ்பெண்ட் செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். ‘முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் செயல் அலுவலர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் செயல் அலுவலர் அஜீத் (இரண்டாம் நிலை) தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்’ என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Square feet, rent collection, loss of revenue, officer, suspended
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து